Saturday 16 December 2023

ஏயர்கோன் கலிகாம நாயனார் குருபூஜை 3.7.2021 சனிக்கிழமை.




 தோழமை பக்தி ஆண்டவன் அடிமை பக்தி, நாயகன் நாயகி பாவம், அம்மையப்பன் குழந்தை  என பக்தியில் பலவகை உண்டு. அவரவர்  விருப்பத்திற்கு ஏற்ப, பக்தர்கள் எவ்வாறு இறைவனை வழிபடுகின்றனரோ ? அவ்வாறே இறைவனும் அவர்களுக்கு அருளுகின்றார்.

இப்படி இந்த பக்தியில் தோழமை மற்றும் அடிமை பக்திக்கும் இடையே நடந்த பக்தி போராட்டம் பற்றிய சுவாரஸ்யமான நாயன்மார் சரித்திரம் இதோ :.
 சோழ மன்னனது படையினைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்கள் ஏயர் குலத்தவர். அந்த ஏயர் குலத்தில் உதித்தவர் 'கலிகாமர்'. இவர்தம் சிறந்த சிவபக்தியின் காரணத்தால் ஏயர்கோன் கலிகாம நாயனார் அடியார்க்கும் அடியேன் என, சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்டவர்.
ஆயினும், கலிகாம நாயனாருக்கு, சுந்தரமூர்த்தி நாயனார் மீது அளவு கடந்த கோபமும் வெறுப்பும் இருந்தது. ஏன்? எனில்,
    சிவபெருமானின் ஆருயிர்த் தோழனான ஆலால சுந்தரர், தர்மம் தழைக்கவும், சிவனடியார்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தவும் சிவபெருமானின் விருப்பத்திற்கிணங்க இப்பூவுலகில் அவதரித்தவர். அந்த தோழைமை காரணமாக, 'தான்'   விரும்பிய 'பரவை நாச்சியாரை' திருமணம் செய்து கொள்ள வேண்டி, அதற்கு தூதாக சிவபெருமானையே அனுப்பினார்.
இதனைக் கேள்வியுற்ற கலிக்காம நாயனார், பிரம்மன் மற்றும் திருமாலாலும் அடியும் முடியும் காணமுடியாத பரம்பொருளான எம்பெருமானை, தான் விரும்பும் பெண்ணிற்காக தூதாக அனுப்புவதாவது!' எம்பெருமானே அதற்கு இசைந்தாலும், சுந்தரமூர்த்தி நாயனார் செய்தது மிகப் பெரிய பாவமாகும். மன்னிக்கமுடியாத குற்றமாகும். இறைவனே!... இச்செய்தியை கேட்டபின்னும் என் உயிர் என் உடலை விட்டு இன்னும் பிரியாமல் இருக்கிறதே! என மிகுந்த மனவேதனையில் வாடியும் வருத்தமும் கொள்ளலானார்.
    தன் செயலால் கலிக்காமர் வருத்தமும் கோபமும் அடைந்து துயரப்படுவதை அறிந்த சுந்தரர் துணுக்குற்று, அடக்கடவுளே! தன்னால் ஒரு சிவனடியார் மன உளைச்சலுக்கு ஆளானதை தாங்க இயலாதவராய், சிவனாரிடமே ,கலிக்காமரது கோபத்தை தணித்து ஆறுதல்படுத்தவேண்டும் என வேண்டினார்.



உடன் சிவனாரும், கலிக்காமர் சுந்தரரைப் பற்றி அறியாததால் தான் இத்தனைத்     துயரத்திற்க்கும்  காரணம் .எனவே தன் இரு பக்தர்களையும், நண்பர்களாக்க திருவுளம் கொண்டார். இதன் காரணமாக கலிக்காமருக்கு வயிற்றில் சூலை நோயை உண்டாக்கினார். அதன் வெம்மையைத்  தாங்க இயலாமல் அதைப் போக்கி அருளவேண்டும் என சிவபிரானைத் தொழுது அழுதார். சிவபிரான் அவர்தம் கனவில் தோன்றி, உமக்கு ஏற்பட்ட இந்த நோயைத் தீர்க்க சுந்தரன் ஒருவனால் மட்டுமே இயலும் எனக் கூறி மறைந்தார். அவ்வண்ணமே சுந்தரரிடமும், நீ சென்று கலிக்காமரது சூலை நோயைக்  குணப்ப்டுத்துவாயாக! எனக் கூறியருளினார். 

     உடன் சுந்தரரும் இறைவனது கட்டளையை சிரமேற்க் கொண்டு கலிக்காமரை நாடி அவர்தம் இல்லத்துக்கு விரைந்தார். சுந்தரர் மேல் கொண்ட பகையினால், அவரால் என் நோய் குணமாவதை விட, நான் இறப்பதே மேல் என தன் உடைவாளை எடுத்து சிறிதும் தாமதியாமல், தன் வயிற்றை கிழித்து குடலை அறுத்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைக் கண்ட அவரது மனைவியும் தானும் அவருடன் உயிர் துறக்க ஆயத்தமானாள். 

  அச்சமயம், சுந்தரர் கலிக்காமரைக் காண வந்து கொண்டிருப்பதாக தகவல் வரவும், விருந்தினர் வருகை ஓம்புதல் அவசியம் எனக் கருதிய அம்மையார், கணவர் இறந்ததை அவருக்கு தெரியப்படுத்தாமல் அவரை தக்க முறையில் உபசரித்து  வழியனுப்ப முடிவு செய்து சுந்தரரை வரவேற்பதற்கான ஏற்பாட்டை  உதவியாளர்களின் துணையொடு தடபுடலாகச் செய்தாள். சுந்தரரிடம், தன் மனத் துயரை    வெளிக்காட்டிக்   கொள்ளாமல் இன்முகத்துடன் உபசரித்தாள். 

   அவளது விருந்தோம்பலை ஏற்றுக் கொண்ட சுந்தரரும் கலிக்காமரின் நோய் தீர்த்து அவரது நட்பினைப் பெறவே யாம் இங்கு வந்துள்ளோம். எனவே நான் அவரை சிறிதும் தாமதியாமல் சந்திக்கவேண்டும் என பரிதவிப்புடன் கூறினார்.

  இல்லை! அவர் நோய் குணமாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்  எனக் கூறவும், அப்படியெனில் எனக்கு மகிழ்ச்சியே! இருப்பினும் அவரை சந்தித்து பேசிவிட்டுச் சென்றால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும் என சுந்தரர் விடாமல் வற்புறுத்தவும், அம்மையார், வேறு வழியின்றி நடந்ததை கூறி ஆற்றாமையினால் அழுது புலம்பினார். 

   திடுக்கிட்ட சுந்தரரும் ஓடிச் சென்று, வயிற்றைக் கிழித்து மரணமெய்திய கலிக்காமரை கண்டு, நன்று செய்தீர்! அடியாரே!. தங்களது இந்த நிலைமைக்கு அடியேன் ஒருவனே காரணம். அதனால் நானும் உயிர்த் துறப்பதே சரி! என்றவாறு, கலிக்காமரது உடைவாளை எடுத்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டார். அதற்குள், இறைவனே, கலிக்காமரை   உயிப்பித்துக்    கொடுத்தார். உயிர் பெற்று எழுந்த, கலிக்காமர், நடந்தவற்றை, இறையருளால் ஊகித்து அறிந்து, பதறி சுந்தரரை தடுத்து, தங்களது பெருமை அறியாமல், நான் தான் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டேன். என்னை தாங்கள்    மன்னித்தருள வேண்டும் என, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.


இரு சிவனடியார்களும் உற்ற நண்பர்கள் ஆனதோடு, இருவரும்  சேர்ந்து பல திவ்ய சிவாலயங்களை தரிசித்து மகிழ்ந்து, கடைசியாக, பரவை நாச்சியாரும், சுந்தரரும் வாழும் 'திருவாரூர்' வந்தடைந்தனர். சுந்தரரின் விருப்பப்படி, கலிக்காமர் அங்கு அவர் வீட்டில் சில நாட்கள் விருந்தினராகத் தங்கி பின், தன் இல்லம் ஏகி தன் சிவத் தொண்டைத் தொடர்ந்தார்.

 ஏயர்க்கோன்கலிக்காம நாயனாரது ஜன்ம தினம் ஆனிமாதம்  ரேவதி நக்ஷத்திரம். இவ்வருடம் ஜூலை 3 ஆம்தேதி 2021 சனிக்கிழமை அன்று அவரது குருபூஜை சிவாலயங்களில் கொண்டாடப்படும். 


No comments:

Post a Comment