Saturday 16 December 2023

ஆடித் தபசு.

 அம்பிகைக்கே வந்த சோதனை!. புகுந்த வீடா ?. பிறந்த வீடா?


உலகத் தாயான அம்பிகை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை கொண்டு , பேதமின்றி காப்பாற்றுபவள். இதனாலேயே , பெண்ணை விட ஆண் உயர்ந்தவன், என்ற அறியாமையினால் பேதம் கொண்டு இருந்த மக்களுக்கு, சிவபெருமானைக் குறித்து தவமியற்றி, ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு 'அர்த்த நாரி' யாக, அதாவது சிவனில் பாதியாக விளங்கினாள்.
   அடுத்ததாக, பக்தர்கள் வடிவத்தில், தர்ம சங்கடமான வழக்கு ஒன்று அம்பிகையிடத்தில் வந்தது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் அனைத்து விஷயங்களிலும் ஒத்து, நட்பு பாராட்டி வந்தாலும், சங்கன் சிவபெருமானின் பக்தனாகவும், பதுமன் மஹாவிஷ்ணுவின் பக்தனாகவும் சைவ, வைணவ வேற்றுமையோடு  திகழ்ந்தார்கள்.
சங்கன் சிவனின் புகழ்பாட, அதை எதிர்த்து பதுமன் விஷ்ணுவின் மஹிமையை வானளாவப் புகழ்ந்து, விவாதம் செய்தனர். நாள்தோறும் இந்த விவாதம் முற்றி சிவனே உயர்ந்தவர் என்றும்,இல்லையில்லை விஷ்ணுவே உயர்ந்தவர் என்றும் இருவரிடையே வாக்குவாதமாக முடிவில்லாமல் வளர்ந்தது. 
       இந்த சச்சரவு தங்களின் நட்பை பாதிக்குமோ? என இருவருமே அஞ்சினர். இதற்கான தீர்வைத் தர, அம்பிகையால் மட்டுமே இயலும் என்ற முடிவுடன், தங்களின் ஐயப்பாட்டை, அம்பிகையிடத்தில் கூறி, தகுந்த வழிகாட்டவேண்டும் என மனமுருகி வேண்டினர்.


இது எப்படி இருக்கிறது?. உன் அண்ணன் உயர்ந்தவனா? அல்லது கணவன் உயர்ந்தவனா? என்று ஒரு பெண்ணிடம் கேட்டால், அவளால் யாரை விட்டுத் தரமுடியும்? 
      இதைக் கேட்ட அம்பிகையும், அவர்களைப் பார்த்து, சிவா, விஷ்ணுவானவர் காலச் சூழலுக்கேற்ப, ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்தவர்கள்.அதனால். இருவரும் ஒருவரே!. இதில் வேற்றுமை பாராட்டவேண்டாம் என  அறிவுறுத்தினாள். ஆனால், அதை ஏற்கும் மன நிலையில் அவர்கள் இல்லை என்பதை உணர்ந்தாள் அன்னை. 
பின், அம்பிகை தீவிர சிந்தனையுடன், உண்மை தான். இது இவ்விருவரின் சந்தேகம் மட்டும் அல்ல!. கோடானுகோடி பக்தர்களின் தீராத சந்தேகமாகவும் உள்ளது. இதற்கான வழியும் அன்னைக்கு புலப்பட்டது. அதாவது, ஹரியும், ஹரனும் இணைந்த கோலத்தை இவ்வுலகம் கண்ணால் கண்டால் ஒழிய, இவர்களை ஏற்றுக் கொள்ள வைப்பது கடினம் என நினைத்தாள். அதை நிறைவேற்ற, சிவா விஷ்ணுவின் ஒத்துழைப்பும் அவசியம் அல்லவா? என நினைத்து தன் கணவனை நாடினாள். 
அம்பிகையின் உள்ளக்கிடக்கையை அறிந்த, சிவபிரானும், எந்தவொரு பலனும் எளிதில் கிடைத்துவிட்டால், பின் அதன் அருமை புரியாது. அதனால், நீ பூவுலகில் சென்று 'தவம்' மேற்கொள்!. தக்க சமயத்தில் நீ விரும்பும் கோலத்தைக் காட்டி அருள்வேன் என வாக்களித்தார்.
  தான் தவம் செய்வதற்கு ஏற்ற இடம் எது? என அம்பிகை சிவபிரானிடம் வினவ, அகத்திய முனி தவமியற்றிக் கொண்டு இருக்கும் பொதிகை மலையின் அருகில், 'புன்னை வனத்தில்' சென்று தவம் செய்வாயாக! என்றார்.
அவ்வண்ணமே அன்னையும் புன்னை வனத்திற்க்கு புறப்படத் தயாராக, அன்னையைப் பிரிய மனமில்லாத, அன்னையின் தோழியரான தேவலோகப் பெண்கள் தானும் உடன் வருவதாகக் கூறி  'பசுக்களாக' மாறியும் இந்திரன் முதலான தேவர்கள் மரங்களாகவும் புன்னை வனத்தில் உருமாறி அனைவருமாகத் தவமியற்றினர்.
அம்பிகை ஹரியும் ஹரனும் இணைந்த   கோலத்தை மனதில் நிறுத்தி "ஊசி முனையில் ஒற்றைக் காலில்" நின்று தவமியற்றத்  தொடங்கினாள். பசுக்கள் சூழ அம்பிகை இருந்ததால், தமிழில் "ஆவுடையாள்",  வடமொழியில் 'கோமதி" என்றும் ['ஆ' மற்றும் 'கோ' என்ற சொல் பசுவைக் குறிப்பதாகும்] திருநாமத்துடன்  விளங்கினாள்.



உலக ஒற்றுமைக்காக கூட்டுப் பிரார்த்தனை  அப்பொழுதே அம்பிகையின் தலைமையில் துவங்கப்பட்டுவிட்டது]
   இவர்களது ஆழ்ந்த தவத்தில் மகிழ்ந்த இறைவனும், மஹாவிஷ்ணுவைத் தன்னுள் ஏற்று, 
ஆடிமாதம் உத்திராட நக்ஷத்திரத்தன்று 
 "சங்கர நாராயணராக" அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.  




வலப்பக்கம் பாதியில், சிவனின் சிவந்த நிறம், இடப்பக்கப் பாதியில் மஹாவிஷ்ணுவின்,கறுப்பு நிறம். அங்ஙனமே, வலப்புறம் ஜடாமுடி, பிறை மற்றும் கங்கையும், இடப்புறம் வஜ்ர மாணிக்க மணிமகுடம் தலையை அலங்கரிக்க,

கழுத்தில் வலதில் ருத்ராக்ஷ்ம், இடதில் துளசி மணி மாலையும், வலக்கையில் சிவனாரின் 'மழு' ஆயுதம், இடக்கையில் 'சங்கும்' ஏந்தியிருக்க, இடுப்பில் வலதில் புலித்தோலாடையும், இடதில் பட்டு பீதாம்பர ஆடையும் அலங்கரித்தன.

இத்திருக்கோலத்தை மூவுலகும் கண்டு வியந்து வணங்கி மகிழ்வுற்றன. சிவபக்தனான சங்கன் மஹாவிஷ்ணு கோலம் தாங்கிய இடப்பக்கமும், விஷ்ணு பக்தனாகிய பதுமன் சிவஸ்வரூபமாய் விளங்கிய வலப்பக்கத்திலும் நின்று மஹாசக்தியான சிவாவிஷ்ணுவை வணங்கி, மனம் தெளிந்து சாமரம் வீசினர்.

        இப்படியாக, ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை, உலகுக்கு உணர்த்துவதற்க்காக  அன்னை மேற்கொண்ட தவம் "ஆடித் தபசு" விழாவாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 'சங்கரன் கோயிலில்" வெகு விமரிசையாக ஜூலை 23 ஆம் தேதிவெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட இருக்கிறது.






வழக்கமாக பத்து நாட்கள் உற்சவமாகக் கொடியேற்றத்துடன் கொண்டாடப்படும். பெருந்திரளான பக்தர்கள் கூட்டம் கோமதி அம்மனின் தவக்கோலக் காட்சியை தரிசிக்கக் கூடுவார்கள். அதிலும்,விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த, நெல், கம்பு, பருத்தி இன்னபிற தானியப் பொருட்களை அம்மனிடத்தில் செலுத்தி ' நேர்த்திக் கடன்' செய்வார்கள். இதனால் விவசாயம் பெருகி பயிர்கள் செழித்து வளரும் என்று நம்பிக்கை.

 இரவில் எம்பெருமான் 'சங்கர நாராயணனாக' எழுந்தருளுவார்..



No comments:

Post a Comment