Saturday 16 December 2023

பிள்ளைகுறு(சு)ம்பு. சிதறுதேங்காய் & தோப்பக்கரணம்

 



ஆகஸ்ட் 7. 2020வெள்ளியன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. ஆவணியில்  வரும் வினாயகர் சதுர்த்திக்கு 15 நாட்கள் முன்பு தேய்பிறை சதுர்த்தியில் வருவது. 


பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?.


தன் தாய் பார்வதி தேவியினால் உருவாக்கப்பட்டு அவர் வாயிலை காவல் காத்துக் கொண்டிருந்தார் வினாயகர். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானை தடுத்து நிறுத்தி அவரை உள்ளே அனுமதியாமல் அலட்சியம் செய்தார். அச்சிறுவன் யாரென்று அறியாததால், விவாதம் முற்றி சிறுவனின் கழுத்தை அறுக்க, பார்வதியால் விவரம் அறியப் பெற்று பின் யானையின் தலையை அவருக்கு சூட்டிய வினாயகரின் கதையை நாம் அறிவோம் அல்லவா?.


இப்படி மகனின் தலையை கொய்ததற்காக மனம் வருந்திய சிவன், தன் பிள்ளையிடமே அதற்கு   பரிகாரமும் கேட்டார். 


பிள்ளையார்  உடன் சிறிதும் தாமதியாமல், தங்கள் தலையை எனக்கு பலி கொடுங்கள் என்றார். முதலில் சிவன் அதிர்ந்தாலும் சமயோசிதமாக தன்னைப்   போன்றே முக்கண் உடைய தேங்காயை அவரிடம் காட்டி அதை தரையில் ஓங்கி அடித்து சிதறச் செய்தார். அதுமுதல் பிள்ளையாருக்கு சிதறு காய் உடைக்கும் வழக்கம் உண்டானது.



இதன் தாத்பரியம் என்னவென்றால், எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அல்லவா?. உயர்ந்ததாக நாம் எதை நினைக்கிறோமோ? அதை இறைவனுக்கு மனதார அர்ப்பணிக்க வேண்டும் என்பதே.


   பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது பற்றி பல கதைகள் இருந்தாலும், சுவாரஸ்யமான ஒரு கதை இதோ:     முதன் முதலில் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டது யாரென்றால் அது, அவரது மாமனான மஹாவிஷ்ணு தான். ஒருமுறை, மஹாவிஷ்ணு தன் மருமகனான குழந்தை வினாயகரை கொஞ்சி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.  அப்பொழுது குழந்தை கணபதியின் கவனம்   மாமன்   கையில் சுற்றிக் கொண்டிருந்த சக்கரத்தின் மேல் பதிந்தது.   எதிர்பாராதவிதமாக, அதை அவர் கையிலிருந்து பிடுங்கி தன் வாயில் போட்டுக் கொண்டு விட்டார் குழந்தை கணபதி.


     இதனால், திகைத்த விஷ்ணு, எப்படி குழந்தையிடமிருந்து சக்கரத்தை வாங்குவது? செல்லப்பிள்ளை. குறும்பும் முரட்டுத்தனமும் நிறைந்தவர்.அவரை மிரட்டவும் மனம் வரவில்லை. அவருக்கு விளையாட்டு காட்டி தான் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானித்து, தன் நான்கு கைகளாலும்  காதைப் பிடித்துக் கொண்டு குதித்து எழுந்து நடனம் ஆடுவது போல் வேடிக்கை காட்டினார். அதைப் பார்த்ததும் குழந்தை அடக்கமுடியாமல் கடகடவென சிரிக்க, உடல் குலுங்கிய வேகத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் வெளியே விழுந்தது. உடன், மஹாவிஷ்ணுவும் சக்கரத்தை எடுத்துக் கொண்டு விட்டார்.  



அதுமுதல் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கம் ஏற்பட்டது. 


தோப்புக்கரணத்தை நாம் தினமும் போடுவதனால் நம் மூளையின் நரம்பு மண்டலம் விரிவடைந்து சுறுசுறுப்பாகி, உடலும் மனமும் ஆரோக்கியம் அடைகிறது என்பது அறிவியல் உண்மையும் கூட. 



No comments:

Post a Comment