Sunday 17 December 2023

திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்.

 




கேணி என்றால் குளம். அல்லிப் பூக்கள் நிறைந்த குளமாக விளங்கியதால் உயர்வு கருதி 'திருவல்லிக்கேணி' என அழைக்கப்படுகிறது. திருவல்லிகேணி என்றாலே பார்த்தசாரதி கோயில் தான் நினைவுக்கு வரும். 


ஆம்! மஹாபாரதத்தில் பார்த்தன் என போற்றப்பட்ட அர்ஜுனனுக்கு சாரதியாக தேரோட்டியாக விளங்கியதால், 'பார்த்தசாரதி' என கண்ணபிரான் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். பாரதப் போரில் கண்ணன் ஈடுபடாமல், போர் முழக்கம் அறிவிக்க மட்டும் சங்கை கையில் ஏந்தியிருப்பார். அவ்வ்வண்ணமே இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமனும் சங்கு மட்டுமே கையில் தாங்கியுள்ளார். போரில் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டு அவனைக் குறி வைத்து வந்த பாணங்களை எல்லாம் தன் திருமேனியில் தாங்கிய வடுக்களுடன் இங்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது. தேரோட்டிக்குரிய லட்சணமாக 'மீசை'யுடன் காணப்படுவதும் சிறப்பு. இதனால் இப்பெருமான் 'பார்த்தசாரதி' என்ற பெயர்க் காரணமாயிற்று. அது மட்டுமின்றி தன் மனைவி ருக்மிணி, சகோதரர் பலராமர் சாத்தகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என மூன்று தலைமுறையுடன் குடும்பமாக காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்புடையதாகும்.


     பரம பக்தனான பல்லவ மன்னன் 'தொண்டைமான் சக்கரவர்த்தி'யின் வேண்டுகோளுக்கிணங்கி திருப்பதி வேங்கடவன் இத்தலத்தில்  எழுந்தருளியிருப்பதாக  ஐதீகம். அதனால் இவருக்கு 'வேங்கட கிருஷ்ணன்' என்ற திரு நாமமும் உண்டு.



பொதுவாக கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இடம் பெற்றிருப்பார். ஆனால், இத்திருக் கோயிலில் பார்த்தசாரதி தவிர 'வேதவல்லித் தாயாருடன் அரங்க நாதனும்', கருடன் மீதேறியவாறு வரதராஜ பெருமாளும், அழகிய ச்ருங்கராக, யோக நரசிம்மரும், ஐந்தாவதாக, ராமர் லக்ஷ்மணன், பரதன் சத்ருக்னன் மற்றும் அனுமனுடன் என ஐந்து மூலவர்கள் சன்னதிகள் இடம் பெற்றுள்ளதால், இது 'பஞ்சமூர்த்தித் தலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது. 



No comments:

Post a Comment