Friday 15 December 2023

வாஸ்து

 


அரை அடி மண்ணாக இருந்தாலும், அது சொந்த மண்ணாக இருக்கவேண்டும் என்ற பழங்காலந்தொட்டு வந்த சொல் வழக்கைக் கேட்டிருப்பீர்கள். ஆம்! அனைவருக்குமே சொந்த வீடு நிலம், நீச்சல் என அடிப்படை வசதி வாழ்க்கை என்ற நியாயமான ஆசை இருக்கும் அல்லவா!?

பஞ்சபூதங்களான நிலம் நீர் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம் என இவை ஐந்தும் சம நிலையோடு விளங்கக்கூடிய இடத்தில் நம் வாழும் மனை அமையப் பெற்றால், சகல விதமான நலன்களும் நம்மிடம் நாடி தங்குவதோடு நிம்மதியான வாழ்க்கையும் அமையப்பெறும் என்பது ஐதீகம். அப்படியான ஒரு சிறப்பான இடத்தை தேர்வு செய்து, அதற்கான மனை பூஜை, வாஸ்து பூஜை செய்து வழிபட்டு, அதன் பின்னரே கட்டிடப் பணியை மேற்கொள்வார்கள். 

அதெல்லாம் சரி! இப்படியாக மனை சாஸ்திர நிபுணனாக, தலைவனாக, விளங்கும் இந்த வாஸ்து புருஷன் யார்? அவரது வரலாற்றை அறிவோமா? 

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போரிடும் போது, அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வைத் துளிகள் பூமியில் விழுந்தன.






அந்த வியர்வை துளியிலிருந்து பெரும் பூதம் பிறந்தது. உடனே 'பசி, பசி' என அலைந்து போரில் இறந்து கிடந்த உடல்களை எல்லாம் சாப்பிட்டும் அதன் அகோரப் பசி அடங்கவில்லை. இதனால் வாடிய அந்த பூதம் சிவனைக்குறித்து கடுந்தவம் மேற்கொண்டது. அத்தவத்தால் மகிழ்ந்த சிவனும் அப்பூதம் வேண்டும் வரம் அளிப்பதாகக் கூறினார்.



உடன் அப்பூதமும், இந்த பூமி முழுவதும் எனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற வரத்தினை வேண்டி கேட்டுக் கொண்டது. தான் வாங்கிய வரத்தின்படி, ஆகாயத்தையும், பூமியையும் ஒருசேர ஆக்கிரமித்து, வடகிழக்கில் தலையையும், தென்மேற்கு பகுதி நோக்கி காலையும் வைத்துக் கொண்டு குப்புறப்படுத்துக் கொண்டது.

இதை அறிந்து கொண்ட பிரம்மா இதனால் தம் படைப்புத் தொழிலுக்கு ஊறு நேரிடும், உலக இயல்பு வாழ்க்கை தடைபடும் என அஞ்சி, மற்ற இந்திரன் முதலான தேவர்கள் உதவியோடு அப்பூதத்தை அனைவருமாகச் சேர்ந்து எழுந்திருக்க முடியாதபடி  ஆளுக்கொரு திசையில் அமுக்கிப் பிடித்தனர். இப்படி அழுத்திப் பிடித்தபடியால் தன்னையறியாமல் மயக்க நிலையில், உறங்கத் தொடங்கியது.


பின், கண் விழித்த பூதம், தன் நிலை உணர்ந்து பிரம்மனிடத்தில், தன்னை இவ்விதம் துன்புறுத்துவது ஏன்? எனவும் கேட்டு,  எனக்கு மிகவும் பசிக்கிறது. என்னை விடுங்கள் என அலறியது. 


உலக நன்மை கருதி, நீ வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே கண் விழித்திருப்பாய் எனவும், அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகை அதாவது 1 1/2 மணிநேரம் மட்டுமே உனக்கான நேரம். அதன்பின், திரும்பவும் உறக்க நிலைக்குச் சென்று விடுவாய் என்றும் கூறினார்.

அத்துடன் பிரம்மா, பூமியில் அந்தணர்கள் செய்யும் ஹோமத்தில் இடும் உணவுப் பொருட்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் முதலில் உனக்கான வாஸ்து ஹோமம், பூஜை செய்து அளிக்கும் உணவினையும் உண்பாயாக! எனக் கூறினார்.

இப்பொழுது முதல் நீ 'வாஸ்து புருஷன் ' என அழைக்கப்படுவாய் என்றும் கூறி அருளினார்.

எந்தெந்த தேவர்கள் எந்தெந்த திசைகளில்  வாஸ்து பூதத்தை அமுக்கிப் பிடித்தார்களோ? அவரவர்கள் அந்தந்த திசைக்கு அதிபதி ஆனார்கள். 


இப்படியாக வாஸ்து புருஷன் கண் விழித்து, 1 1/2 மணி நேரத்தில் தன் கடன்களை முடித்து, உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கக் கூடிய கடைசி 36 நிமிடங்களே பூமி பூஜைக்கு ஏற்றது என்கிறது சாஸ்திரம். 


அதனால், பூஜைக்கு வேண்டிய திரவியங்களுடன் தயாராக இருந்து, இந்த கடைசி 36 நிமிடங்கள் முடிவடைவதற்குள், வடகிழக்கு மூலையில் 3 அடிக்கு 3அடி 1 அடி ஆழம் என்ற கணக்கில் தோண்டப்பட்டிருக்கும்   பள்ளத்தில், சாஸ்திரிகளின் வழி நடத்துதலில், விநாயகர், குலதெய்வம் மற்றும் வாஸ்து பூஜை செய்ய மனை சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.


வடகிழக்கு ஈசனின் பெயரால் 'ஈசான்ய மூலை' எனப்படுகிறது. ஈசனால் உருவாக்கப்பட்ட, வாஸ்துவிற்கான பூஜையை ஈசான்ய மூலையான வடகிழக்கு பகுதியில் நடத்தப்படுகிறது.


வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி செவ்வாயன்று காலை 6:52 மணி முதல் 8:22 வரையிலான வாஸ்து பூஜைக்கான சிறந்த நேரமாக   வாக்கியப் பஞ்சாங்கம் கூறுகிறது



No comments:

Post a Comment