Sunday 3 December 2023

திரு நாளைப் போவார் (நந்தனார் சரித்திரம்.)


  




புரட்டாசி 21 அக், 7 ஆம்தேதி புதன் கிழமையன்று ரோகிணி நக்ஷத்திரம் அன்று "திரு நாளைப் போவார்" நாயனாரது குருபூஜை தினம்.

  செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்
என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்பட்டவர் இந்த நந்தனார். நாயன்மார்கள் சரித்திரத்தில் பெரிய கதையாகும். 
      சோழ நாட்டில் ஆதனூர் எனும் சிற்றூருக்கருகில் குடிசைகள் நிறைந்த 'புலைப்பாடி' என்ற ஒரு இடம் இருந்தது. சாதி வேற்றுமைகள் மிகுந்து இருந்தஅந்த நாளில் தாழ்ந்த சாதியாக கருதப்பட்ட  புலையர்கள் எனப்படும்   உழவுத்  தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதி அது. அதனால் புலைப்பாடி எனப்பட்டது.
   அந்தப் பகுதி மக்களின் தலைவனாக 'நந்தன்'  என்பவர்   சைவ நெறியோடு வாழ்ந்தார். சுகாதாரமின்றி வாழும் அந்த பகுதி மக்கள் இடையே, தினமும் அதிகாலை குளித்து    திருநீறு  பூசி சிவனின் துதி பாடிய வண்ணம் தன் அன்றாடப் பணிகளைச் செய்து வந்தார். அத்துடன் அந்த மக்களையும் தன் ஓய்வு நேரத்தில் கூட்டி உட்கார வைத்து சிவபிரானின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பார். 
   திருக்கோயிலுக்கு தேவையான கோரோஜன் எனும்    அபிஷேக  வாசனைப் பொருள் மற்றும் தாள வாத்தியத்திற்க்குத் தேவையான தோல் போர்வை மற்றும் வீணை, யாழுக்கான நரம்புக் கம்பிகளையும் இலவசமாக    கோயிலுக்கு அளித்து சிவத் தொண்டு புரிந்தார்.    
 அந் நாளில் தாழ்ந்த சாதியினர் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்ற விதியை மனம் கோணாமல் ஏற்று நடந்தார். ஆயினும் ஐயனை தரிசிக்கும் ஆவல் மிகுதியால்   ஒரு நாள் அருகில் உள்ள "திருப்புன்கூர்" எனும்    சிவத்தலத்திற்கு தன் சகாக்களையும் உடன் அழைத்துக் கொண்டு நாம் வாசலில் நின்று சிவனை தரிசித்து வருவோம் என்று அழைத்துச் சென்றார். ஆனால், சிவலிங்கத்தை  மறைத்தவாறு பெரிய நந்தியின்   சிலை இருந்தது. இதனால் இவர்களுக்கு சுவாமி தரிசனம் கிட்டவில்லை.

 உடனே, அவரது நண்பர்கள் எல்லாரும், என்னப்பா நந்தா! இந்த கல்லா உட்கார்ந்திருக்கிற இந்த காளைமாட்டை  காண்பிக்கவா எங்களை இம்மாந்தூரம் அழைத்து வந்தாய்?. இந்த மாதிரி காளை மாடு தான் நம் ஊரில் உயிரோடே    சுத்திக்கிட்டு திரியுதே என கேலி பேசினர்.
      இப்படி ஒரு நிலையை எதிர்பாராத நந்தனாரும் மனம் நொந்து இறைவனை  உருகி வேண்டினார். உடன் இறைவனும், தன் பக்தனின் வேண்டுகோளுக்கிணங்கி, நந்தியை நோக்கி, சற்றே விலகி இரும் பிள்ளாய்! என ஆணையிட்டார். அவ்வாறே நந்தியும் விலகவும், அனைவரும் அவரது பக்தியின் மகிமையை உணர்ந்து மனம் நெகிழ்ந்து பெருமானை   மகிழ்வோடு தரிசித்தனர். இன்றும் திருப்புன்கூர் கோயில் நந்தி விலகி இருப்பதைக் காணலாம். 
   சிவதரிசனம் முடிந்து திரும்பவும் தன் ஊர் திரும்ப எண்ணிய பொழுது, வழியில் கோயிலின் திருக்குளம் தூர்ந்து போய் குட்டையாகி இருந்ததைக் கண்டு, இதை சீர் செய்தால்,  இக்கோயிலுக்கும், அவ்வூர் மக்களுக்கும் பயனாகுமே   என எண்ணினார். ஆனால், அடுத்த நாள் வேலைக்குச்    செல்லவேண்டும். இவ்வளவு பெரிய குளத்தை ஒரே நாளில் தூர் வாரவும் இயலாதே என் செய்வேன்! என மனம் வருந்தினார். உடன் இறைவனும் தன் மூத்த குமாரனான கணபதியை அனுப்பி வைத்தார். தந்தையின் ஆணையை ஏற்று வினாயகரும், தேக பலம் பொருந்திய பணியாளாக நந்தனாரிடம் சென்று , அவரிட்ட வேலையை திறம்பட முடித்து, நந்தனார் கூலியாகக் கொடுத்த ஐந்து மரக்கா நெல்லை பெற்றுக் கொண்டு தன் தந்தையின் காலடியில் வைத்தார் வினாயகர். 
நந்தனாருக்கே கூலியாக ஒரு மாதத்திற்கு 15 மரக்கா நெல்மணிகள் தான் கிடைக்கும் . அதிலும் ஐந்து மரக்கா   சிவ தொண்டிற்காக    கொடுத்து விட்டார்.
      பக்தனின் காணிக்கையை காலடியில் வைப்பதாவது என்று இறைவனும் நெல் மணிகளை தன் தலையில்   வைத்துக்  கொண்டார். இப்படியாக அடிக்கடி அருகில் உள்ள தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து மகிழ்ந்து வந்த வேளையில், அனைத்து தலங்களுக்கும் தலைமையான  தில்லை சிதம்பர நாதனை தரிசிக்கும் ஆவல் அவருள்   துளிர்த்தது. தன் நண்பர்களிடம் தான் தில்லைக்கு நாளைக்குச் செல்லப் போவதாகக் கூறினார். ஆனால், பொழுது புலர்ந்ததும், தான் தாழ்ந்த குலத்தோன் ஆதலால் தான் அங்கு செல்ல இயலாது என்று தன் ஆசையை அடக்கிக் கொண்டார். ஆயினும், திரும்பவும் மனதில் ஆசை துளிர் விட, நாளை நான் கண்டிப்பாக தில்லைக்குச் செல்லப் போகிறேன் என்று இவ்வாறு அடிக்கடி இது தொடரவும், அவரது இயற்பெயரான நந்தனார் என்பது மறைந்து, அவர் சகாக்களால், அவர் " நாளைப் போவார்" என்று கிண்டலாக அழைக்கப்பட்டார். அதுவே உயர்வு கருதி, 'திரு நாளைப்    போவார்"  ஆயிற்று.!
  தன் பக்தனின் மனக் கிலேசத்தை அறிந்த எம்பெருமானும், நந்தனார் கனவில் தோன்றி, நீ தில்லைக்கு எழுந்தருளுவாயாக!  கண்டிப்பாக உனக்குத் தரிசனம் கிட்டும் என கூறியருளினார்.
 கனவு தெளிந்து கண் விழித்து மிகுந்த ஆனந்த வெள்ளத்தில்  திளைத்தவராய்  உடனே தன் எஜமானரைச் சந்தித்து, தான் தில்லைக்குச் சென்று நடராஜ பெருமானை தரிசிக்கப் போவதாகக் கூறி அனுமதி வேண்டினார்.
 ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடாதது போல், அவர் எஜமானரும், 
 ஏம்பா நந்தா! நம்ம நிலத்து பயிர் வேலையெல்லாம முடித்து பிறகு செல்லலாம் என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார். 
ஓ ஐயனே! எப்பொழுது விதை விதைத்து நாற்று நட்டு கதிர் அறுத்து, என்று நான் உன்னைக் காண்பேன் என வேதனையோடு கண்ணீர் சொறிந்தார்.
    பக்தனின் நிலையறிந்த சிவபிரானும் உமையம்மையை நோக்கி புன்முறுவலுடன், என்ன  தேவி! கதிர் எல்லாம் அறுக்கத் தயார் நிலையில் உள்ளதா? என வினவினார். அம்மையும், இதோ தயார் என பயிரிட்டு தயாராகியிருந்த கதிர் மணிகளை அறுத்துக் கொடுத்தாள்.
ஆம்! வினாயகப் பெருமானுக்கு குளம் வெட்டுவதற்கு நந்தனார் கூலியாகக் கொடுத்த விதை நெல்லை, எம்பெருமான் தன் தலையில் கங்கை பாய வைத்துக் கொண்டாரல்லவா? அது தான் பயிர் முற்றி கதிர் ஆகியது. பின்னாளில் இப்படி ஒரு நிலை உருவாகும் என, தன் பக்தனுக்காக முன்பே அதைத் தானே பயிரிட்டு தயார் செய்து வைத்ததோடு, அந்த கதிர் மணிகளை அளித்து, நந்தனாருக்கு அவர் எஜமானனிடமிருந்து அனுமதியோடு தன்னை காணும் வகை வழி செய்து திருவிளையாடல் புரிந்தார்.
ஈசனின் கருணையை எண்ணியெண்ணீ வியந்தவாறு, தில்லையை அடைந்தவர், அங்கு தில்லை மூவாயிரவ அந்தணர்களின் வேத கோஷமும், அவர்கள் நடத்தும் யாகத் தீயின் புகை மண்டலமும் கண்டு, தன் குலம் நினைத்து தில்லையின் உள்ளே செல்ல விருப்பமில்லாமல், தன்னை உய்வடையச் செய்து, தன்னை ஆட்கொள்ளும்படி மனமுருகி  இறைவனை வேண்டினார். 
அவரது எண்ணப்படியே இறைவனின் கட்டளைப்படி தில்லை மூவாயிரவரான அந்தணர்களும் வேத கோஷம் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் அவரை அணுகி, தில்லை மதில் வாசல் அருகே நாங்கள் இங்கு 'தீ மூட்டி'த் தருகிறோம். நீர் அதில் மூழ்கி எழுக! என கூறவும்,
  நந்தனாரும்  சிவ நாமம் ஜபித்தவாறு, அவர்கள் மூட்டிய தீயை வலம் வந்து வணங்கி மூழ்கலானார். ஆனால், ஆங்கே நிகழ்ந்த அதிசயம் !
   ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசத்துடன், பால் போன்ற மேனியும் முனிவர் போன்ற சடாமுடியுடனும், வெண்ணீறு தாங்கிய தூய்மையான கோலமுமாக தீயில் இருந்து வெளி வந்தார் நந்தனார்.
தில்லை மூவாயிரவரும் மற்ற மக்களும் அவர் பக்தியின் பெருமையை அதிசயித்து நின்றனர். உடன் மூவாயிரவர்கள் நந்தனாரை வழி நடத்தி, இறை சன்னதிக்கு அழைத்துச் செல்ல, கூப்பிய கரங்களோடு உள்ளே சென்று நடராஜப் பெருமானின் நடனத் திருக்கோலத்தை கண்ணார தரிசித்தவர், பின் திரும்பவில்லை. ஆம்! எம்பெருமான் ஆடலரசன் நடராஜனுடன் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே பாத கமலங்களில் ஐக்கியமாகிவிட்டார். 

No comments:

Post a Comment