Saturday 2 December 2023

நசிகேதன் வரலாறு கட உபநிஷதம்' .

  



நடக்கும் மஹாளய பக்ஷத்தில், திங்கட்கிழமை நாளைய தினம் ஸன்யஸ்த மஹாளயம்" . துவாதசி திதியான அன்றைய தினம்  "சித்தி"அடைந்த சன்னியாசிகளுக்கு திதி கொடுத்தல் நலம். 

   அடுத்த நாள் செவ்வாயன்று "கஜச்சாயை". அதாவது இந்த திரயோதசி திதியில் புண்ணிய தலங்களான "கயா, காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு"ச் சென்று அனைத்து பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் ஆகும். 
 அடுத்த நாள் புதனன்று "சஸ்திரஹத பிதுரு மஹாளயம்". அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் அல்லது துர்மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அந்த நாளில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது நியதி.
     அடுத்த நாள் புரட்டாசி 1 செப்.17.2020 வியாழன் அன்று "ஸர்வ மஹாளய அமாவாசை".
மேற்கூறிய ஒவ்வொரு திதிகளிலும் ஒவ்வொரு விதமான பலன்கள் அதைத் தவிர இந்த மஹாளய அமாவாசையில் திதி அல்லது படையல் கொடுப்பதால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அனைத்து பலன்களையும் நமக்கு ஆசிர்வதிக்கின்றார்கள். 
          பித்ருக்களுக்குண்டான இந்த மஹாளய பக்ஷ சமயத்தில் அதன் தொடர்பான நசிகேதனின் கதையைப் பற்றி அறிந்து கொள்வோம்.!   நம் ஒவ்வொருவருக்குள்ளும் பிறப்பு, இறப்பு பற்றிய பற்பல சிந்தனைகள், கேள்விகள் அவ்வப்பொழுது நிழலாடச் செய்யும் அல்லவா?. அதைப் பற்றி கூற வந்ததே இந்த 'கட உபநிஷதம்'.
 யஜுர் வேதத்தில் ' சுக்ல யஜுர் மற்றும் கிருஷ்ண யஜுர்' என இரண்டு பிரிவுகள் உள்ளன. கிருஷ்ண யஜுர் வேதத்தில்   'தைத்திரீய ஆரண்யகம்' என்ற பகுதியின் கீழ்  'கடர்' எனும் முனிவர் அருளிச் செய்ததால் அவர் பெயர் கொண்டே இது 'கட உபநிஷதம்' என வழங்கப்படுகிறது. 
             முன்பொரு காலத்தில் 'வாஜசிரவஸ்' என்ற பெரும் செல்வந்தன் "விச்வஜித்" எனும் யாகம் செய்தான்.  இந்த யாகத்தின் நோக்கம் பேரரசனாகி உலகையே ஆள்வது. ஆனால், யாகத்தின் முடிவில் தன்னிடமுள்ள அனைத்தையும் தானமாகக் கொடுத்துவிட வேண்டும் என்பது இதன் நியதி. 
ஆனால், வாஜசிரவஸ் தனக்கு உபயோகமற்ற  பொருட்களையும், கறவைகள் நின்ற கிழட்டு பசுக்களையும் தானமாக வழங்கினான். 
வாஜசிரவஸுக்கு உயர்ந்த சிந்தனையும்,   லட்சியமும்,  சிரத்தையும் கொண்ட 'நசிகேதன்' என்றொரு மகன் இருந்தான். தந்தையின் இச்செயலால் யாகத்தின் நியதியை மீறிய குற்றமும், தானத்தின் பலனும் இல்லாமல் இரட்டைக் குற்றத்திற்கு ஆளாவார் என்பதை உணர்ந்தான். 
  ஆயினும் தந்தைக்கு  சிறுவனான தான் அறிவுரை கூறுவது முறையல்ல. அதே சமயம் அவரை இத்தவறிலிருந்து காப்பாற்றுவது தன் கடமை என சிந்தித்து,
   சிறந்தவற்றையே தானம் செய்யவேண்டும். ஒரு தந்தைக்கு தன் மகனை விட சிறந்த செல்வம் வேறு இருக்கமுடியாது என்பதால், தன் தந்தையிடம் சென்று 'என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்?'  என்று கேட்டான். அதாவது சிறந்ததையே தானமாகக்கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீகள் என மறைமுகமாக அவருக்கு விஷயத்தை தெளிவுபடுத்தினான்.  
   ஆனால் தந்தை நசிகேதனை பொருட்படுத்தவில்லை. ஆனாலும் சிறுவன் அவரை விடாமல் நச்சரித்துக் கொண்டே இருந்தான். இதனால் கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை யமனுக்கு தானமாகக் கொடுக்கிறேன் போ!  என எரிந்து விழுந்தார். 
     தான் எதற்காக இவ்விதம் கேட்டேன் என்பதை புரிந்து கொள்ளாமல், தன்னை யமனுக்கு கொடுப்பதாகச் சொல்லிவிட்டாரே என மனம் வேதனைப்பட்டான். கோபத்தில் கூறிய வார்த்தை என்றாலும், தந்தையின் வாக்கை காப்பாற்றுவது ஒரு மகனின் கடமை என்றும், தான் செல்வதற்கு முன் தந்தையிடம் வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக்கூறி, தான் யமனிடம் செல்வதைப் பற்றி கவலைப்படவேண்டாம் என அவரைத் தேற்றிவிட்டு யமலோகம் நோக்கிச் சென்றான்.
      நசிகேதன் சென்ற சமயம், யமதர்மன் அங்கு இல்லை. அவருக்காக நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. திரும்பி வந்த யமராஜன், சிறுவனது உன்னதத்தன்மை அறிந்தவராயும் தன்னை நாடி வந்தவனை காக்க வைத்ததையும் எண்ணி மனம் வருந்தியவராய், அவனிடம் மன்னிப்புக் கோரி, அதற்கு ஈடாக மூன்று வரங்கள் தருவதாகவும் கூறி விரும்புவதைக்கேட்கச் சொன்னார். உடன் சிறுவனும், அவரை வணங்கி, யமராஜனே எனது முதல் வரமாக,   
     யமனைச் சந்தித்து வருகின்ற என்னை, இறந்தவனாகக் கருதாமல், தெளிந்த மனதோடு என்னை தன் மகனாக என் தந்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். என கேட்கவும் ' அப்படியே ஆகுக! என வாழ்த்துரைத்து, அடுத்து இரண்டாவது என்ன வரம் வேண்டும்? என்றார் யமன்.
உடன் நசிகேதன், சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழி பற்றி இரண்டாவது வரமாகக் கேட்டான். 
யமராஜனும் அதற்கான யாக விதிமுறைகளை போதித்தார்.
தான் கேட்டு புரிந்து கொண்டதை அப்படியே திரும்பவும் யமராஜனுக்கு விளக்கினான் நசிகேதன்.
தான் தகுந்த ஒருவனுக்கு இந்த வித்யையை அளித்ததால், சிறந்த சீடனிடம் குருவுக்கு ஏற்படும்  வாத்சல்யத்துடன்  அகமகிழ்ந்து யமனும், இந்த யாகம், உன்பெயராலேயே 'நசிகேத யாகம்' என அழைக்கப்படும் என்றும், மேலும் 'நவரத்தின மாலையையும்' பரிசாக கேட்காமலே மேலும் இரண்டு வரங்களாக அளித்தார். அதன் பின்,மூன்றாவது வரம் யாது? என கேட்கவும்,
பிரபுவே! மரணத்திற்கு பின் உயிரின் உண்மை நிலை என்ன? ஆத்மா உயர் நிலை (முக்தி) அடையும் வழி  யாது? என்பதை அறிவதே எனது மூன்றாவது வரமாகும் எனவும், அதிர்ந்த யமராஜன், 
குழந்தாய்! இதைப் பற்றி தேவர்களுக்குமே சந்தேகம் உண்டு. இது நுண்மையானது. நீ வேறு என்ன வேண்டுமானாலும் கேள்!. கல்வி, செல்வம்  நீண்ட ஆயுள், பதவி என அனைத்தையும் தரமுன் வந்தார். இவை அனைத்துமே நிலையற்றவை. என தன் கொள்கையில் பிடிவாதமாக இருந்தான் சிறுவன்.
    அவனது உறுதியையும், ஞானத்தையும் உணர்ந்த யமதர்மன், அவ்வண்ணமே ஆத்மாவைப் பற்றியும், ஆத்ம ஞானம் மற்றும் அதன் சாதனைகள் ஆகியவற்றைப் போதித்து  ஆசிர்வதித்து அனுப்பினார்.
   
 

No comments:

Post a Comment