Sunday 17 December 2023

ராமநாம மஹிமை & பரதனின் பக்தி

 


  • இராமாயண காவிய கதாபாத்திரங்கள் அனைத்துமே பற்பல வாழ்வியல் நீதிகளை தானே வாழ்ந்து காட்டியுள்ளது   என்றே  கூறலாம். 
  •    அதில் எளியாரை இகழேல்!. அவ்வாறு   இகழ்தலால்  உண்டாகும் விளைவின் வாழ்வின் நியதியாக பரதனே ஒரு எடுத்துக் காட்டு. :
  •     வைகுண்டத்தில் இருந்து தன் பக்தரைக் காக்கும் பொருட்டு ஒருமுறை எம்பெருமான் மஹாவிஷ்ணு சங்கு சக்கரம் பாதுகைகள் என எதுவும் இன்றி, விரைந்து பூவுலகம் சென்றுவிட்டார். பாதுகைகள் அணியக் கூடிய நேரம் கூட தாமதம் ஏற்படுத்தி விடும் என்பதால், பாதுகைகளை கையில் எடுத்தவர் அதை அவசரமாக தலைமாட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். 
  •      எம்பெருமானின் கைகளில் தங்களைத் தாங்கியிருக்கும் பெருமையில், சங்கு சக்கரம் இரண்டும்,கால்மாட்டில் இருக்கவேண்டிய பாதுகை தலை மாட்டிற்கு இடம் பெயர்ந்தது அவைகளுக்குப் பிடிக்கவில்லை. அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் தான் இருக்கவேண்டும் என எம்பெருமானது பாதுகைகளை பலவாறாக இகழ்ந்தன. 
  •        எம்பெருமான் வைகுண்டம் திரும்பியதும், அங்கு நிலவிய ஒருவித அமைதியில் நடந்ததை ஊகித்து அறிந்தார். காயப்பட்ட நிலையிலும், தன் பாதுகைகள் காட்டிக் கொடுக்காமல் பொறுமையுடன் இருந்ததைக் கண்டு, அதன் பால் மேலும் அன்பு பெருக, அதன் பெருமையை, சங்கு சக்கரத்திற்கு மட்டுமின்றி, இவ்வுலகுக்கே உணர்த்த திருவுளம் கொண்டார். 
  •     அதன்படி, சங்கு சக்கரமே ராமாவதாரத்தில், பரத சத்ருக்னனாக அவதரித்தனர். ராமர் மணிமுடி துறந்து, ஜடாமுடி தரித்து கானகம் சென்றதை அறிந்து , அவரை எப்படியாவது அரியணையில் ஏற்றியே தீருவேன் என பெரும் பிரயத்தனம் செய்த பரதனின் முயற்சிகள் தோல்வியுறவே , வேறு வழியின்றி, தாங்கள் இல்லாத அந்த அயோத்தி நகருக்குள் நானும் நுழையமாட்டேன், தங்களின் பாதுகைகளை அரியணையில் வைத்து பூஜித்து வருவேன். தங்களின் பாதுகைகளே இந்த 14 ஆண்டுகளும் ராஜ்ஜியத்தை வழி நடத்தும் என, உறுதிபடக் கூறி பாதுகைகளை தன் தலையில் சுமந்தவாறே அயோத்தியின் உள்ளே செல்லாமல் எல்லையில் உள்ள நந்திகிராமத்தில்  இருந்தவாறே 'பாதுகா பட்டாபிஷேகம்' செய்து அவ்வண்ணமே நடந்தான். 

அண்ணனுக்கு உறுதுணையாக சத்ருக்னன் பரதனுக்கும் ராமபாதுகைக்கும் பணிவிடை செய்தான் பாதுகைகளை துச்சமாக எண்ணி இகழ்ந்தவர்களே அதன் மஹிமை உணர்ந்து அதை பூஜித்ததன் மூலம் கர்வம் அழிந்து புனிதமடைந்தனர். வாயிலில் இருக்கவேண்டிய பாதுகை என இகழ்ந்தவர்கள், அப்பாதுகைகளைத் தன் தலையில் சுமந்தனர். அத்துடன்,  நகரத்திற்க்குள் செல்லாமல் 
நகர வாயிலிலேயே இருந்து 'திருவடிச் சேவை' புரிந்து தவ வாழ்க்கை வாழ்ந்தனர். இதனால் பரதனின் பழி நீங்கியதோடு, ராமனைக் காட்டிலும் பெரிதும் போற்றப்பட்டான். 

 எம்பெருமானின் பாதங்களைப் பணிவதாலேயே நம் உள்ளத்து அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து நம் மனமும் பேரின்ப நிலையடைகிறது.  

    பரதனின் பக்தியின் சிறப்பை ராமனே உணர்ந்து   வியக்கும்படியானதொரு நிகழ்வு! 

        ராமபிரான்,சீதையை இலங்கையில் இருந்து மீட்பதற்காக கடலில் அணை கட்ட முனைந்தார் அல்லவா?. அதற்காக சமுத்திர ராஜனான வருணனை நினைத்து  அணைகட்ட வழிவிட்டு அனுமதி தருமாறு வேண்டித் தவமிருந்தார்.   ஆனால் மூன்று நாட்களாகியும் வருணன் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்ததைக் கண்டு பொறுமை இழந்து கோபத்துடன், இந்தக் கடலையே வற்றச் செய்துவிடுகிறேன் என தன் ராம பாணத்தை ஏவினார். 


      ஆனால், கடல் பேரிரைச்சலுடன் கொந்தளித்ததே தவிர, வற்றவில்லை. வருணனும் ராமனின் கோபங்கண்டு பயந்து, ஓடோடி வந்து பணிந்து மன்னிப்புக் கோரி வேண்டிய உதவிகளைச் செய்தான்.



ஆயினும் ராமபிரானுக்கு ஆச்சரியம் தாளாமல், ஏன்? எனது பானத்திற்கு கடல் வற்றவில்லை?  எப்படி?  என்ன காரணம்? என வருணதேவனிடம்    கேட்டார்.   

 அதற்கு வருண பகவான் ராமரைப் பார்த்து, தங்களது தம்பியான பரதன், தினமும் தங்களை சிந்தையில் நிறுத்தி,   தங்கள் நாமத்தை இடையறாது உச்சரித்தவண்ணம் தங்களது பாதுகைக்கு சரயு நதியிலிருந்து நீர் எடுத்து திருமஞ்சனம் (அபிஷேகம்)   செய்கிறான். அந்த புனிதமான திருமஞ்சன நீர் கடலில் கலந்துள்ளது  இந்த தீர்த்தத்தின்  புனிதம்  காரணமாகவே  ராமபாணத்திற்க்கும் கடல் நீர் வற்றவில்லை என்று வருண பகவான் விளக்கினார்.

ஆக, ராமனை விட ராம பாணமும், ராமபாணத்தை விட ராம நாமமும் ராம பக்திசிந்தனையும் உயர்ந்ததாகவும் போற்றப்படுகிறது. 




No comments:

Post a Comment